பாட்னா

நேற்று பாட்னாவில் உள்ள தமிழர்களை முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பாட்னாவில் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.  பாட்னா தமிழ்ச் சங்கத் தலைவர் என்.சரவணகுமார் ஐஏஎஸ், செயலாளர் மகாதேவன் தலைமையில் 20 தமிழர்கள் முதல்வரைச் சந்தித்தனர்.

இவர்களில், ஐஏஎஸ் அதிகாரிகளான கே.செந்தில்குமார், தியாகராஜன், சஜ்ஜன், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் ரவீந்திரன் சங்கரன், அவரது மனைவி மலர்விழி, ஐஎப்எஸ் அதிகாரி கணேஷ்குமார் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.  தனித்தனியே அனைவரையும் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்

இதுகுறித்து பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் என்.சரவணகுமார்,

“பீகாரில் தமிழர்கள் எண்ணிக்கை குறித்தும் அவர்களது குழந்தைகள் தமிழ் பயில்கிறார்களா என்றும் முதல்வர் ஆர்வமுடன் கேட்டறிந்தார். தமிழ் கற்றுத் தரத் தமிழ் இணையக் கல்விக் கழகம் உதவத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது”

எனக் கூறி உள்ளார்.