மதுரை
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலர் நல்லமணி மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில்,
“அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில பொதுச் செயலாளராக நான் பதவியில் உள்ளேன். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் மாணவர்களுக்குப் பரிசும், ஊக்கத்தொகையும் வழங்கும் நிகழ்வின் போது, சில விஷயங்களைப் பேசினார். அவரது அரசியல் வருகை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலகத்தில் நடந்த ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் ஏழைகளுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் நடிகர்கள் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர்.
விஜய் வசந்த் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜயயை இணைக்கத் தயாராக இருப்பதாகவும், அதைத் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
ஆனால் விஜய் வசந்த் எம்.பி.யின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் அவர் மீதான அவதூறுகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. பா.ஜ.க.வை சேர்ந்த சுரேஷ் என்பவரின் முகநூல் பக்கத்தில் விஜய் வசந்த் எம்.பி. குறித்து தகாத வார்த்தைகளில் பதிவிடப்பட்டுள்ளது. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”
எனக் கூறியிருந்தார்.
புகார் மனு அளிக்கும் போது மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன், சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் நியாமத் இப்ராகிம் சபி, பறக்கும் படை பாலு, ஸ்ரீதர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.