ம்பால்

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

மணிப்பூரில் உள்ள மைதேயி மற்றும் குகி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த மாதம் முதல் கடும் கலவரம் நிகழ்ந்து வருகிறது.  இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.  மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்ட போதிலும் அமைதி திரும்பாத நிலை உள்ளது.

மணிப்பூரை ஆளும் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளனர்.    அந்த கடிதத்தில் அவர்கள், பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கம் மீதும் நிர்வாகத்தின்மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறி உள்ளனர்.

மேலும் குகி சமூக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மைதேயி சமூக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு. இடையே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.  மணிப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் மத்திய பாதுகாப்புப் படைகளை ஒரே சீராக நிறுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கரம் ஷியாம் சிங், தோக்சோம் ராதேஷ்யாம் சிங், நிஷிகாந்த் சிங் சபம், குவைரக்பம் ரகுமணி சிங், ப்ரோஜென் சிங், ராபிந்த்ரோ சிங், ராஜன் சிங், கெபி தேவி மற்றும் ராதேஷ்யாம் ஆகிய 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.