சென்னை
கடந்த 2 ஆண்டுகளில் சென்னையில் சாலை விபத்து மரணம் 19.70% குறைந்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”சாலை விபத்துகளால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனை அடைய, கடுமையான விதிகள் அமலாக்கம் மற்றும் முறையான போக்குவரத்து ஒழுங்குமுறை மூலம் முயல்கிறது. அமலாக்கம் மற்றும் ஒழுங்கு முறை தவிர, சாலைப் பயனாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏனெனில் விபத்துகளைத் தடுப்பது ஒன்றிணைந்த பொறுப்பு என்பதால்,எச்சரிக்கையாக இ ருக்கவும்,பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தவும் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்துக் கற்றுக்கொள்ளவும் மக்களை வலியுறுத்துகிறது. மேலும், விபத்துகளைத் தடுக்க,பயனுள்ள மற்றும் திறமையான அமலாக்கத்துக்காக பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கையாண்டு வருகிறது.
சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதற்கு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ளது ஆண்டு வாரியாக விபத்துகள் குறைந்த விவரத்தின் மூலம் தெளிவாகிறது
2021-ம் ஆண்டு, (304 A) சட்டப்பிரிவின் கீழ் 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 269ஆக இருந்தது. 2022-ம் ஆண்டு, (304 A) சட்டப்பிரிவின் கீழ் 238 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 240ஆகவும், 2023-ம் ஆண்டில், (20.06.2023 வரை) 214 வழக்குகள் (304 A) சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 216 ஆக குறைந்துள்ளது.
உயிரிழப்பு விபத்து வழக்குகள் மற்றும், இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளதைக் காணலாம். 2021 உடன் ஒப்பிடும்போது,உயிரிழப்பு வழக்கு விகிதம் 2022ல் 10.78% குறைந்துள்ளது. மேலும்,2022 உடன் ஒப்பிடும்போது 2023ல் உயிரிழப்பு விகிதம் 10% குறைந்துள்ளது. எனவே, 2021 உடன் ஒப்பிடும்போது, 2023-ல் உயிரிழப்பு எண்ணிக்கை இன்றுவரை 19.70% குறைந்துள்ளது.”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.