மோட்டார் வாகன வரியை உயர்த்த தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதால், புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை விரைவில் 5% உயர உள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய சாலை வரிக் கட்டணம் கடந்த ஜூன் 2008 இல் மற்றும் கார்களுக்கான வரி ஜூன் 2010 இல் திருத்தப்பட்டது.

தற்போது, அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் 15 ஆண்டுகளுக்கான சாலை வரியாக வாகன விலையில் 8% சதவீதம் வசூலிக்கப்படுகிறது.

இனி, இந்த வரி 1 லட்சம் வரையிலான இருசக்கர வாகனங்களுக்கு 10 சதவீதமாகவும், 1 லட்சத்துக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதமாகவும் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், தற்போது ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாகன விலையில் 10% சாலை வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள கார்களுக்கு 15% வரியும் விதிக்கப்படுகிறது. புதிய திட்டப்படி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்படும். 20 லட்சத்திற்கு மேல் விலையுள்ள கார்களுக்கு வாகனத்தின் விலையில் 20% வரி விதிக்கப்படும்.

2022-23ஆம் ஆண்டில் ரூ.6,674.29 கோடியாக இருந்த போக்குவரத்துத் துறையின் ஆண்டு வருவாயில் இந்த புதிய வரிகள் மூலம் மேலும் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் உள்துறை, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் நடத்திய கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

வர்த்தக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத பிற வாகனங்களுக்கான வரிகளும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயர்ந்த வாகனங்களை வாங்கக் கூடியவர்களுக்கு அதிக வரி விதிக்கும் கொள்கையின் அடிப்படையில் சாலை வரி திருத்தம் செய்யப்படுவதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்தன. குறைந்த விலை வாகனங்களுக்கான வரியில் பெரியளவு மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 10, 2021 அன்று, மாநிலத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடும் போது, அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் சாலை வரி விகிதங்களை உயர்த்த முன்மொழிந்தார், தற்போதைய வரி விகிதங்கள் தென் மாநிலங்களில் மிகக் குறைவு என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து வரியை சீரமைக்க போக்குவரத்து துறை கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது.

இந்த புதிய வரிவிதிப்பை அடுத்து, 100சிசி பைக்குகள் ரூ.55,000 முதல் ரூ.70,000 வரையிலும், 125சிசி பைக்குகள் ரூ.85,000 முதல் ரூ.95,000 வரையிலும் இருக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன், 150சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளை வாங்குபவர்கள் இப்போது கூடுதலாக ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை (ஜிஎஸ்டி உட்பட) செலவிட வேண்டியிருக்கும்.

2022-23 ஆம் ஆண்டில், 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதிகாரப்பூர்வ தரவுகளின்படி அதில் 12.5 லட்சம் இருசக்கர வாகனங்கள். போக்குவரத்துத் துறையின் வருவாயில் ரூ.6,674.29 கோடி, சாலை வரி 88% அல்லது ரூ.5,873 கோடி, கட்டண வசூல் 10% அல்லது ரூ.667.43 கோடி. மீதமுள்ள 2% கூட்டுக் கட்டணமான ரூ.133.48 கோடியில் இருந்து வந்தது.