வேலூர்

நூதன முறையில் கர்நாடக பேருந்தில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் வினாயகமூர்த்திக்கு  பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லை பத்தலப்பல்லி சோதனை சாவடி வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

எனவே பத்தல பல்லி சோதனை சாவடி பகுதியில் பறக்கும் படை வட்டாட்சியர் விநாயக மூர்த்தி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அந்த நேரத்தில் அப்போது வேலூரிலிருந்து கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் நோக்கி சென்ற கர்நாடக மாநில பேருந்தைச் சோதனையிட்டனர்

சோதனையில் நூதன முறையில் வெளிமார்க்கெட் அரிசி பைகள் போன்று தைக்கப்பட்டிருந்த 15 மூட்டைகள், மற்றும் பிளாஸ்டிக் பைகளில் 8 மூட்டைகள் என மொத்தம் 555 கிலோ எடை கொண்ட 23 ரேஷன் அரிசி மூட்டைகள் கர்நாடக மாநிலத்திற்குக் கடத்த முயன்றது தெரிய வந்தது.

பறக்கும் படையினர் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். இதன். மதிப்பு ரூ 5 ஆயிரத்து 550 ஆகும். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை குடியாத்தம் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன. பறக்கும் படையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.