சென்னை
தலைமை ஆசிரியர் பணி இடம் காலியாக இருந்தால் அங்கு தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்து கொள்ள பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஆசிரியர் பொது கலந்தாய்வு காரணமாகப் பல பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்குப் பணி மாற்றம் பெற்றுள்ளனர். இதனால் பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணி இடக்கள் காலியாக உள்ளன. இதையொட்டி பள்ளிக் கல்வி இயக்குநர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், “நடந்து முடிந்த ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாலோசனைக்கு பிறகு உள்ள காலிப்பணி இடங்களில் தலைமை ஆசிரியர் பணி இடம் காலியாக உள்ளன. எனவே இந்த பணிகளுக்கு பொறுப்பாசிரியராகப் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது.
இவர்களது பணிச்சுமையைக் குறைக்க இவர்களுக்குப் பதிலாகத் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளப் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நியமனம் கடந்த ஆண்டு நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.