அம்மான்
சவுதி கட்டிடக் கலை நிபுணரை ஜோர்டான் நாட்டு இளவரசர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஜோர்டான் நாடு வறுமையும் கல்வியறிவின்மையும் நிரம்பி வழியும் நாடுகளில் ஒன்றாகும். சுமார் 1.1 கோடி மக்களைக் கொண்ட ஜோர்டானில் மன்னராட்சி முறை நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. இங்கு மன்னராட்சி குறித்த விமர்சனங்கள் பரவலாக இருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் மன்னராட்சி முறையை ஆதரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டானின் இளவரசர் ஹூசைன் – சவுதியின் கட்டிடக்கலை கலை நிபுணர் ராஜ்வா அல் சைஃப் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் உலகப் பிரபலங்கள், அரசக் குடும்பங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நேற்று இளவரசரின் திருமணத்தை முன்னிட்டு ஜோர்டானில் அரசு விடுமுறை விடுக்கப்பட்டு, அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் செய்யப்பட்டது.
இத்திருமணம் ஜோர்டான் – சவுதி இடையே அரசியல் ரீதியிலான உறவை மேலும் மேம்படுத்தும் என்பதால் கூடுதல் கவனத்துடன் வளைகுடா நாடுகள் இந்த நிகழ்வை உற்று கவனிக்கின்றன. தங்கள் திருமணம் முடித்த இளவரசரையும், அவரது மனைவியையும் வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொடியசைத்து வரவேற்றனர்.