பெங்களூரு,

விரைவில் அனைத்து மகளிருக்கும் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் எனக் கர்நாடக அரசு அறிவிக்க உள்ளது

நடந்து முடிந்த கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் கடந்த மே 20 ஆம் தேதி பதவியேற்று உள்ளார்கள்  அப்போது அவர்களுடன் 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். மேலும் யுடி காதர் கர்நாடகா சட்டசபை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி மேலும் 24 பேர் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் கர்நாடக அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடகாவில் அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களுக்கான இலாக்காக்கள் கடந்த 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.  இதன்படி இதில் போக்குவரத்துத் துறை இலாக்கா அமைச்சர் ராமலிங்க ரெட்டி வசம் வழங்கப்பட்டது.

நேற்று பெங்களூரில் 4 மண்டல அரசு போக்குவரத்துக் கழக தலைவர்களுடன் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆலோசனை மேற்கொண்டார். இதில் தமிழ்நாட்டைப் போன்றே கர்நாடகாவிலும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட் வழங்குவது குறித்தும் ஆலோசித்து உள்ளார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம்,

“அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து டிக்கெட் வழங்கும் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதன் கிழமை அரசிடம் முடிவை சமர்பிக்க உள்ளோம். அதன் பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்”

எனத் தெரிவித்துள்ளார்.