மே 15 ம் தேதி லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் சரவணன் பழனியப்பன், விஜயகுமாரன், அரவிந்த் ராஜ் மற்றும் விஜய் ஆனந்த், லட்சுமி முத்துராமன் மற்றும் ப்ரீத்தா விஜயானந்த் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கணக்கில் வராத சுமார் 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

லைகா மற்றும் கல்லல் குழும நிறுவனங்கள் இடையிலான முதலீடு மற்றும் கடன் பரிவர்த்தனையில் சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளைக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கூறிவருகிறது.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷனுக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்து கணக்கில் வராத 34.5 லட்ச ரூபாயை கல்லல் நிறுவன பண மோசடி வழக்குடன் சம்பந்தப்பட்டதாக அமலாக்கத்துறை இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியை இந்த வழக்கில் தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டிருந்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கிருத்திகா உதயநிதி இது தவறான செய்தி என்றும் தனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.