திருவண்ணாமலை
ரூ.2000 நோட்டுக்களை மாற்ற டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு அளிக்க வேண்டும் என தமிழக வணிகர் சங்க தலைவர் விக்கிரம ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று திருவண்ணாமலை வட்டம் அனைத்து வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்தவிழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர்,
”தமிழ்நாடு முழுவதும் 2017-18-ம் ஆண்டுகளுக்கான ஜி.எஸ்.டி. கணக்குகள் முடிக்கப்பட்டு ஒவ்வொரு கடையாக நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டு வட்டி வசூலிப்பது போல் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் ஜி.எஸ்.டி.யை அதிகமாகக் கட்டக்கூடிய மாநிலத்தில் ஒன்றாகும்.
இவ்வாறு வணிகர்களை வஞ்சிக்கும் வகையில் இருக்கக்கூடிய ஜி.எஸ்.டி.யில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுத்து விரைந்து சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ரிசர் வங்கியோடு மத்திய நிதி அமைச்சர் தொடர்பு கொண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தர வேண்டும். மாநிலத்தில் நிறைய சிறிய குடும்பங்கள் மற்றும் சிறிய கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைச் சிறு சேமிப்பாக வைத்து உள்ளனர். எனவே அவற்றை மாற்றுவதற்கு கால நீட்டிப்பு செய்து தர வேண்டும்.
வணிக கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வணிகர்கள் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்வார்கள்.எனவே கால நீட்டிப்பு செய்ய வில்லை என்றால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து மனு பரிசீலனை செய்யப்படும்”.
எனக் கூறி உள்ளார்.