டில்லி
மத்திய அரசு டில்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்க ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதால் சர்ச்சை கிளம்பி உள்ளது.
தொடர்ந்து டில்லியில் ஐ.,ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளை நியமிக்கிற, இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனத்திலும், இடமாற்றத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த 11-ந் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பின்படி பொது ஒழுங்கு, காவல்துறை, நிலம் ஆகிய 3 துறைகள் தவிர்த்து மற்ற எல்லாவற்றிலும் டில்லி அரசுக்குத்தான் அதிகாரம் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதிநிதியாகத் திகழ்கிற துணை நிலை ஆளுநரின் அதிகாரம் இதனால் பறிக்கப்படுகிறது. மத்திய அரசுக்கும் டில்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ள சூழலில், இந்தத் தீர்ப்பு, மத்திய அரசுக்குப் பின்னடைவாக அமைந்தது.
எனவே இத்தீர்ப்பைச் செல்லாதது ஆக்குகிற வகையில் மத்திய அரசு அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாகத் தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இ சட்டத்தில், “தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம், தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தவும், அதற்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்றவும் வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆணையத்தின் தலைவராக முதல்வரும், உறுப்பினர் செயலாளராகத் தலைமைச் செயலாளரும், உள்துறைச் செயலாளரும் இடம் பெற்றிருப்பார்கள். எல்லா முடிவுகளையும், கூட்டத்தில் ஆஜராகிற பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்துத் தீர்மானிக்க வேண்டும். இந்த அவசரச் சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தால், முதல்-மந்திரி தன் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த அவசர சட்டத்தை மோசடி என்று முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சாடி உள்ளது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டில்லி பொதுப்பணித்துறை மந்திரியுமான ஆதிஷி ,
“உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வின் ஒருமித்த தீர்ப்புக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் விருப்பப்படியும், ஜனநாயக கொள்கைகள் படியும் சுதந்திரமாக முடிவுகள் எடுக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம், மோடி அரசு தோல்வி அடைந்து வருவதையே காட்டுகிறது. கெஜ்ரிவால் அரசிடம் இருந்து அதிகாரத்தைப் பறிப்பதுதான், மத்திய அரசு இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்ததின் ஒரே நோக்கம் ஆகும். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. உச்சநீதிமன்றம் கோடை விடுமுறை விட்டுள்ள தருணத்தில் வேண்டுமென்றே இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்”
என்று கூறி உள்ளார்
இந்த அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்குக் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அவசரச் சட்டத்தை பா.ஜ.க. வரவேற்றுள்ளது.