ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன? இந்த தோஷம் அகல என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
ஏழரைச்சனியைத் தோஷம் என்று குறிப்பிடுவது தவறு. ஏழரை நாட்டுச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு இராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி வந்து அமரும்போது ஏழரைச் சனி பிடிக்கிறது என்று சொல்கிறோம்.
முந்தைய இராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம இராசியில் இரண்டரை வருடம், நமது இராசிக்கு அடுத்த இராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனியின் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரை சனி என்கிறோம். ஆக, 22 வருடங்களுக்கு ஒரு முறை ஏழரைச் சனி என்பது நமது வாழ்வில் இடம்பிடிக்கிறது. இந்தக் காலத்தில் சிறுசிறு தடங்கல்களைச் சந்திக்க நேரிடுமே தவிர, பெரிய அளவிலான பாதகங்கள் ஏதும் ஏற்படாது. அவரவர் ஜாதக ரீதியாக நடைபெறும் தசாபுக்தியே பலன்களை நிர்ணயம் செய்யும். ஏழரைச் சனியினால் உண்டாகும் தடைகள், இடையூறுகள் தற்காலிகமானதே தவிர நிரந்தர பிரச்சனையைத் தராது.
ஏழரைச் சனி என்பது சாலையில் பயணிக்கும்போது குறுக்கிடும் வேகத்தடைகள் போல். வேகமாக வண்டி ஓட்டுபவனுக்குச் சாலையில் குறுக்கிடும் வேகத்தடை எரிச்சலைத் தரும் என்றாலும் அது வேகத்தைக் குறைத்து விபத்து ஏற்படாமல் அவனது உயிரைப் பாதுகாக்கிறது. அவ்வாறே, ஏழரைச் சனியின் காலமும் தடைகளைத் தந்து எந்த காலத்திலும் உதவிடும் அனுபவ அறிவினை அருள்கிறது. சனி பகவான் தனது கடமையைச் செய்வதில் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவரால் உண்டாகும் சோதனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். எனினும் ஏழரை சனியின் தாக்கத்தினைப் பெறுபவர்கள், சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காகத்திற்கு எள்ளுப்பொடியுடன் சிறிதளவு தயிர் கலந்த சாதம் வைப்பது நல்லது. எள்ளுப்பொடி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதும் நன்மை தரும்.
சனிக்கிழமையில், வீடுவாசல் தேடி வரும் பிச்சைக்காரர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உங்களால் இயன்ற அளவிற்கு உணவினை செய்யுங்கள். ஆதரவற்ற முதியவர்கள், அநாதைச் சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வதும் சனி பகவானுக்குச் செய்யும் பரிகாரமே ஆகும். பொருளுதவிதான் என்று இல்லை. இவர்களுக்கு நம்மால் இயன்ற உடல் ரீதியான உதவியையும் செய்யலாம். தொண்டு செய்வது, சேவை குணம் ஆகியவை சனிக்கு மிகவும் பிரியமானவை. ‘சனி கொடுக்க எவர் தடுப்பர்’ என்பது முதுமொழி. ஏழரைச் சனி விலகும் நேரத்தில் எந்த காலத்திலும் நம் நினைவில் நிற்கக்கூடிய பெரும் செல்வத்தைச் சனி அருள்வார் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.