இம்பால்
கலவரம் செய்வோரைக் கண்டதும் சுட மணிப்பூர் மாநில அரசு உத்தரவு இட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதற்குப் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது. நேற்று முன் தினம் பழங்குடி ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. அந்நேரத்தில் பழங்குடிகளுக்கும் – மேதி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் காவல் துறை குவிக்கப்பட்டு இணையச் சேவையை 5 நாட்களுக்கு முடக்க மாநில அரசு உத்தரவிட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் இதுவரை 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பணிகளைக் காவல் துறையோடு, ராணுவமும் அஸ்ஸாம் ரைபில்ஸ் படைப் பிரிவும் இணைந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அந்த செய்தித் தொடர்பாளர், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். கலவரக்காரர்கள் பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையை மீறினால் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்டதும் சுட மணிப்பூர் அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மாநில ஆளுநர் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.