சுப்ரமணியம் சுவாமி மீது அட்வாண்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்த எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது.
இதனையடுத்து முன்னாள் எம்.பி.-யும் பாஜக மூத்த தலைவருமான சுப்ரமணியம் சுவாமி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர வெளிநாட்டு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புடைய “ஏர்செல்-மேக்சிஸ்” ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஏப்ரல் 2012 ல், சுப்ரமணியம் சுவாமி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்.
இதில் அட்வாண்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மீது சுப்ரமணியம் சுவாமி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் இது ஒரு சட்டவிரோத நிறுவனம் என்றும் தெரிவித்திருந்தார், அதனால் சிங்கப்பூரில் அதன் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன் வணிக ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
சிங்கப்பூரில் தன் மீது வழக்குத் தொடர அந்நிறுவனத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று சு. சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். சு.சுவாமி கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி சிங்கப்பூரில் வழக்கு தொடர தடை விதித்தது.
தனி நீதிபதியின் உத்தரவு தவறானது என்று சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சிங்கப்பூரில் உள்ள நிறுவனம், ஒரு இந்தியரின் துணை நிறுவனம் என்பதால், இந்திய நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு ஏற்றது என்று தனி நீதிபதி தவறாக புரிந்துகொண்டார் என்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனமாக இருப்பதால் சுப்ரமணியம் சுவாமி மீது சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தடையில்லை என்று தீர்பளித்துள்ளனர்.