சென்னை:
தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி ஆணையர் தாரேஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டத்தை காலை 11 மணிக்கு நடத்த வேண்டும். அப்போது குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்: கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக் கூடாது. கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கூட்டம் நடத்துவது குறித்து பதிவு செய்யும் வகையில், கைபேசி செயலி ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்ய வேண்டும்.
மேலும், மே 1-ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்து, அதுதொடர்பான அறிக்கையை அனுப்ப வேண்டும்.
கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கைஅறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, கிராம வளர்ச்சித் திட்டம், அனைத்துகிராம மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு, பிரதமரின் கிராம சாலைத் திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, ஜல் ஜீவன் இயக்கம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்பு திட்டம் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.