திரு நிலாத்திங்கள் துண்டம் திருகச்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, மத்தாகப் பயன்பட்ட மேருமலையைத் தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி(பாம்பு), ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது.
தேவர்கள் பல சிகிச்சைகளைச் செய்தும் பயனில்லாமல் போனது. கலங்கிய மகாவிஷ்ணு தனது உடல் பழைய நிறம் பெற வழி கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினார். சிவனிடம் வேண்டினால் உஷ்ணம் குறைந்து நிறம் மாறும் என ஆலோசனை கூறினார் பிரம்மா. அதன்படி மகாவிஷ்ணு, சிவனை எண்ணித் தவமிருந்தார். விஷ்ணுவுக்கு காட்சி தந்த சிவன், தனது தலையில் இருந்த பிறைச்சந்திரனை மகாவிஷ்ணு மீது ஒளி பரப்பும்படி பணித்தார். சந்திரனும் தன் கதிர்களைப் பரப்ப, நீலவண்ணத்தை மீண்டும் பெற்றார்.
முன்பை விட பொலிவாகவும் விளங்கினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் கோயிலில் வடகிழக்கு பாகத்தில்(ஈசானிய மூலை) பெருமாள் சன்னதி அமைக்கப்பட்டது. சிவாலயத்துக்குள் இருக்கும் இந்த சன்னதி பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெருமாளின் நிறம் மாற தானும் ஒரு காரணமானதால் வருத்தம் கொண்ட வாசுகி, அவருக்குக் குடையாக நின்று பரிகாரம் தேடிக்கொண்டது. சந்திரனின் ஒளியால் இயல்பு நிறம் பெற்றதால் இத்தலத்துப் பெருமாளை “நிலாத்திங்கள் துண்ட பெருமாள்” என்று அழைக்கின்றனர்.