இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கச்சத்தீவு பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நெடுந்தீவைச் சேர்ந்த பாதிரியார் வசந்தன் கூறியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 மற்றும் 4 ம் தேதிகளில் நடைபெற்றது.
இந்த திருவிழாவின் போது இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் சென்றனர்.
அதேபோல் இலங்கையில் உள்ள நெடுந்தீவு பகுதியில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.
இருநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் தங்கள் தொப்புள்கொடி உறவைபுதுப்பிக்கும் நாளாகவே ஆண்டுதோறும் இதனை கொண்டாடி வருகின்றனர்.
சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் யாரும் வசிக்காத இந்த தீவில் புனித அந்தோனியார் கோயிலைத் தவிர வேறு எந்த ஒரு கட்டிடமும் இல்லை.
இந்த நிலையில், அந்தோனியார் சர்ச்சுக்கு சென்ற நெடுந்தீவைச் சேர்ந்த பங்குத்தந்தை வசந்தன் தாங்கள் கொண்டு சென்ற தகர தட்டியை காணவில்லை என்று இலங்கை கடற்படையினர் தங்குவதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் அருகில் சென்று தேடியுள்ளார்.
அப்போது அந்த கூடாரத்தின் அருகில் சுற்றிலும் பனைஓலை தட்டிகள் வேயப்பட்டு மறைக்கப்பட்ட இடத்தை பார்த்த அவர் அதனுள் சென்று காணாமல் போன பொருளை தேடியுள்ளார்.
அந்த இடத்தில் 3 அடி உயரத்தில் ஒரு புத்த பிரகாரமும், 5 அடி உயரத்தில் சிலையுடன் கூடிய ஒரு புத்த பிரகாரத்தையும் பார்த்ததாகவும் அதன் அருகில் ஒரு அரச மரம் ஒன்று நடப்பட்டு வளர்ந்திருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இதனை தனது மொபைல் போனில் படம்பிடித்து வைத்துள்ளதாகவும் கூறி அதனை வெளியிட்டுள்ளார்.
கச்சத்தீவில் 1905 ம் ஆண்டு ராம்நாட் பகுதியைச் சேர்ந்த மீனவர் சீனிவாச படையாச்சி என்பவரால் கட்டப்பட்ட புனித அந்தோனியார் ஆலயத்தை தவிர வேறு எந்த ஒரு கட்டிடமோ மரம் மட்டோ இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் அங்கு புதிதாக புத்தர் சிலை இருந்ததாக வெளியான விவகாரம் ராமேஸ்வரம் மற்றும் நெடுந்தீவு பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேலும் கூறிய பங்குத்தந்தை வசந்தன் இந்த புத்தர் சிலை கடந்த 3 ஆண்டுகளுக்குள் நிறுவப்பட்டதாக இருக்கக்கூடும் என்றும் மரங்கள் வளர வாய்ப்பு இல்லாத நிலத்தில் வெளியில் இருந்து அரச மரம் கொண்டுவரப்பட்டு நடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தவிர, அந்த பகுதியை நிர்வகித்து வரும் இலங்கை அரசின் கடற்படையினர் வந்து செல்லும் போது வழிபடுவதற்காக அமைக்கப்பட்டதாகவும் இது தெரிகிறது என்று கூறியுள்ளார்.
பங்குத்தந்தை வசந்தனின் இந்த தகவலைத் தொடர்ந்து கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வரலாற்றை அழிக்கும் சதி நடைபெற்று வருவதாக இலங்கை மற்றும் இந்தியாவில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள பி.பி.சி., இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் செய்தி சேகரிக்க சென்றபோது கடற்படையினரின் பாதுகாப்பு முகாம் அருகே பனை ஓலை தட்டிகளால் நாற்புறமும் மறைக்கப்பட்ட ஒரு பகுதியைப் பார்த்ததாக உறுதிசெய்துள்ளது.
மேலும், அந்த இடத்திற்குள் தாங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.