டெல்லி: ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை சட்டப்படி சந்திப்போம் என காங். மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி தெரிவித்து உள்ளார்.
மோடி என்ற ஒரு சமூகத்தினரை திருடன் என விமர்சித்த ராகுல்மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை பாராளுமன்ற செயலகம் தகுதி நீக்கம் செய்துள்ளது. இது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த, மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, ராகுல் நாட்டின் பொருளாதாரம், சமூகம், அரசியல், சீன எல்லை பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் உண்மையை பேசி வருகிறார். இதற்க மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், அச்சமடைந்துள்ள மத்திய அரசு, ராகுல்காந்தியில் குரலை நெறிக்க புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து வருகிறது.
அரசியலமைப்பு சட்டம்103-ன் படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதி தான் ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்யமுடியும். இந்த விவகாரத்தில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்கின்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை கூட கேட்கவில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.