டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு 27ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில், இன்றைய தினம் அமளிகளுக்கு இடையே பட்ஜெட் மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு சபாநாயகர் அளிக்காததால் மக்களவையில் இருந்து திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு கடந்த 13ந்தேதி தொடங்கியது. இந்த அமர்வு ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பாஜக, ராகுலின் இந்திய விரோத பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதானி விவகாரத்தில் ஜேபிசி விசாரணை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இந்த அமர்வு அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பல மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. ரூ.45 லட்சம் கோடி செலவுக்கான மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் சபை கூடியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மானிய கோரிக்கைகளையும், அவற்றுக்கு நிதி ஒதுக்குவதற்கான மசோதாவையும் விவாதம் மற்றும் ஓட்டெடுப்புக்காக தாக்கல் செய்தார். ஆனால், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர், தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அனைத்து அமைச்சகங்களின் மானிய கோரிக்கைகளையும் விவாதமின்றி ஓட்டெடுப்புக்கு விட்டார். அதைத்தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறின. அவற்றின் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதன்மூலம், 2023-2024 நிதி ஆண்டில் மொத்தம் ரூ.45 லட்சம் கோடி செலவழிப்பதற்கான மானிய கோரிக்கைகளுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மீண்டும் சபை கூடியதும், ஆளும்கட்சி, எதிர்க்கட்ச எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை கூடியவுடன், சபை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அதானி விவகாரத்தை விவாதிக்கக்கோரி 267-வது பிரிவின்கீழ் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 நோட்டீஸ்கள் அளித்திருந்தனர். அவற்றை சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார். அதையடுத்து, அதானி பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகளும், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியும் கோஷமிடத் தொடங்கின. இதைத்தொடர்ந்து, பிற்பகல் 2 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தை தொடருமாறு பிஜு ஜனதாதள எம்.பி. சுஜீத் குமாரை சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் கேட்டுக்கொண்டார். ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மாறிமாறி கோஷம் எழுப்பினர். துணைத்தலைவர் அமைதியாக இருக்குமாறு கூறியும் ஏற்கவில்லை. இதனால், அவர் சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முன்னதாக, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங்களுக்கு மத்தியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பட்ஜெட் மசோதா நிறை வேற்றினார். இந்நிலையில், மக்களவையின் அடுத்த அமர்வு, மார்ச் 27-ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், ஊழியர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், நிதிசார்ந்த விழிப்புணர்வை பராமரிக்கவும் ஓய்வூதிய முறை குறித்து நிதி செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து கொண்டார்.