புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திலும் விரைவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. புதுவையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு, மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவuன திமுக எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது,. பொதுமக்களை பாதிக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழகத்தில் தீர்மானம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ளது. இதேபோல் சுற்றுலா நகரம் மற்றும் ஆன்மீக பூமியான புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் கூறிய சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன். புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டத்துறை ஒப்புதல் பெற்று, புதுச்சேரி மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
திமுக கொண்டுவந்துள்ள கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பாஜக உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.