சென்னை:
வர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய, ‘ஆன்லைன்’ சூதாட்ட தடை சட்ட மசோதா, இன்று சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த தி.மு.க. அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, அக். 19-ம் தேதி சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் அளித்தது. சில மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு கவர்னருக்கு மீண்டும் அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், கவர்னர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அரசு அளித்த பதில்களையும் பேரவையில் விளக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.