சென்னை: தமிழ்நாட்டில், ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், இன்று சென்னையிலும் ஆவின் பால் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்து, 2000 கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் சங்கங்கள் கலைக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபகாலமாக தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விநியோகம் தாமதமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் தாமதமாக விநியோகம் செய்ததால், பால் முகவர்கள் ஆவினில் இருந்து கொள்முதல் செய்த பால் பாக்கெட்டுகளில் பாதியளவிற்கும் மேல் சில்லரை வணிகர்களுக்கு விநியோகம் செய்ய முடியாமல் தேக்கமடைந்தது. ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் ஆகாமல் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதில் தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. ஆவின் பாலினால் பால் முகவர்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆவின் நிறுவனம் பால் முகவர்களிடம் இருந்து பால்கொள்முதல் செய்வது, தனியார் முகவர்களை விட குறைந்த கட்டணத்திலேயே வாங்குவதால், பால் முகவர்கள் தனியாரிடமும் பால் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஆவினுக்கு வர வேண்டிய பால் தனியார் நிறுவனங்களுக்கு சென்றுவிடுகிறது. சுமார் 2ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு பால் விற்றதாக எழுந்த புகாரின் பெயரில் சுமார் 2000 பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு பல்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களுக்கு பால் விற்றது தொடர்பான புகார் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், விதிகளை மீறி செயல்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பால்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் சங்கங்கள் கலைக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.