சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் சாலையின் தரத்தை உறுதி செய்ய மாநகராட்சி ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.172 கோடியே 70 லட்சத்தில் 226 கிமீ நீளத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலைப் பணிகளை கண்காணிக்கவும், தரத்தை உறுதி செய்யவும் ஆணையர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட் கட்டமைப்பு நிதி மற்றும் சேமிப்பு நிதியின் கீழ் ரூ.68 கோடியே 70 லட்சத்தில் 125 கிமீ நீளத்திலும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.104 கோடியில் 101 கிமீ நீளத்திலும் சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.172 கோடியே 70 லட்சத்தில் 1,110 சாலைகள் 226 கிமீ நீளத்தில் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தப் பணிகளைக் கண்காணிக்க ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இணை ஆணையாளர் (பணிகள்), வட்டார துணை ஆணை யாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இரவில் இப்பணி நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய றிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்குழுவினர், சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் போது உரிய தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வேண்டும். பணிக்கு முன்பாக ஏற்கெனவே இருந்த சாலையைத் தேவையான அளவுக்கு அகழ்ந்தெடுக்க வேண்டும்.
அகழ்ந்தெடுக்கப்பட்ட சாலையின் ஆழத்தையும், அமைக்கப்பட்ட சாலையின் உயரத்தையும் சரி பார்க்க வேண்டும். தார் கலவையின் தரம் மற்றும் அதன் பேக்கிங் தேதி சரிபார்க்கப்பட வேண்டும். தார் கலவையின் வெப்பம் 140 முதல் 160 டிகிரிசெல்சியஸ் அளவில் பயன்படுத்தப்படுகிறதா எனச் சரிபார்க்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.