சண்டிகர்: இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக, இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 90 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8 பேருக்கு H1N1 வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் சமீப காலமாக இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸின் H3N2 திரிபு அதிக அளவில் பரவி வருகிறது. இது பன்றிக் காய்ச்சலை தோற்றுவிக்கும் H1N1 வைரசின் திரிபு என கூறப்படுகிறத. இந்த வைரஸ் தற்போது நமது நாட்டில் அதிக அளவில் பரவி வருகிறது என்று ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.
இந்த H3N2 தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இந்த காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் , மூச்சு விடுவதில் சிரமம், விடாத தீவிர காய்ச்சல் , நெஞ்சுப்பகுதியில் வலி , எதையும் சாப்பிட முடியாத அளவு சுணங்கிக் கிடப்பது, தலைசுற்றல், வலிப்பு போன்றவை அபாய அறிகுறிகள் காணப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் முறையான சிகிச்சை எடுக்க வேண்டும் என ஏற்கனவே மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் இன்று மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 2 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்த H3N2 வைரஸ் பாதிப்பு காரணமாக, முதல் மரணம் கர்நாடக மாநிலத்தில் பதிவாகி உள்ளதாகவும், 2வது மரணம் அரியானா மாநிலத்தில் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.