சென்னை: இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னைஅண்ணா சாலை மகளிர் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதித்த பெண்களுக்கு விருதுகள் மற்றும் பலருக்கு பணி ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழா முடிந்ததும், அலுவலகம் திரும்பியவரும் வரும் வழியில், அண்ணா சாலையில் உள்ள மகளிர் காவல் நிலையம் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கு பணியாற்றும் பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது, சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் உடனிருந்தார்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர், சென்னை, அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, அங்கு பணிபுரியும் பெண் காவலர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து, நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கியதாகவும், காலை மகளிர் காவலரை வாழ்த்திய பின், எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றேன். சமூகத்தின் உயர்நிலைகளில் பெண்கள் நிறைந்திருப்பதைக் காண தந்தை பெரியார் இல்லையே என ஏங்கினேன்! திராவிட இயக்கம் இம்மண்ணில் விதைத்துள்ள சிந்தனை மாற்றத்தை மகளிர் தின விழாக்கள் வலிமைப்படுத்தட்டும் என குறிப்பிட்டுள்ளார்.