சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், பிப்ரவரி 28-ம் தேதி முதல், ‘ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜன. 4 ஆம் தேதி வெளியானது. பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலமே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு விடும்
இந்த தேர்வுகளை எழுத பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தனித்தேர்வர்களும் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில், தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நேரடியாக தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் இணையதளத்தில் வரும் 28-ம் தேதி முதல் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
பிளஸ் 1 அரியர் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் சேர்த்து எழுத உள்ள தனி தேர்வர்களுக்கு, இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் ஆக வழங்கப்படும். பாட வாரியான தேர்வு கால அட்டவணை விவரங்களை, https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.