சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் முறையிட திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கூடாது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவானாவது தள்ளுபடி செய்யப்பட்டு அதிமுக பொதுக்குழு செல்லும் எனும் வகையில் தீர்ப்பு வெளியானது. பொதுக்குழு செல்லும் என்றால் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் எனவும், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனவும், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எனவும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி இபிஎஸ் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்தை நாட நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களையும், கட்சி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள கூடாது. இந்த திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் அது நீதிக்கு அப்பாற்பட்டது. அது மட்டுமின்றி என்னுடைய சட்டப்பூர்வமான உரிமையை பாதிக்கும். எனக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தும் என ஓபிஎஸ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.