ஈரோடு: ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி சீமான் பரப்புரை செய்ய அனுமதி கிடையாது என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் அருந்ததியினர் சமுகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சி தலைவர் சீமான், ஈரோடு கிழக்கு வீரப்பன் சத்திரம் அருகே காவிரி சாலையில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதில் பலர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், இன்று செய்தியளார்களை சந்தித்த தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி சீமான் பரப்புரை செய்ய அனுமதி கிடையாது. பதற்றம் நிலவுவதால் சீமான் பரப்புரைக்கு பாதுகாப்பு தர முடியாது என எஸ்பி அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று நாட்களுக்கு சீமான் பரப்புரை செய்ய திட்டமிட்ட இடங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. மற்ற கட்சியினர் பரப்பரை செய்யும் இடங்களில் சீமான் அனுமதி கேட்டால் அனுமதி வழங்க இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.