சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த கோரி எந்தவொரு புகாரும் வரவில்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை 61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியது தொடர்பாக அரசியல் கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலர், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியான தன்னிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஆதாரம் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அமையும். சிவிசில் ஆஃப்பில் ஒரு புகார் மட்டுமே வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பணப்பட்டுவாடா தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஆனால், இவ்வாறு சமூக வலைதளத்தில் இருப்பதாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே புகைப்படங்கள், வீடியோ தொடர்பான ஆதாரங்களை சிவிசில் ஆஃப்பில் பதிவிடலாம்.
பல்வேறு புகார்கள் வந்தாலும், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக புகார்கள் எதுவும் தன்னிடம் வரவில்லை. சட்ட, ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.