வேலூர்: ”தமிழ்நாட்டு இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் உழைக்க முன்வரவேண்டும்”, தமிழக இளைஞர்கள் வேலைசெய்ய தயார் என்றால் நாங்களும் வேலைவாய்ப்பை கொடுக்க தயார் என வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஓட்டல் பணிகள், கட்டுமானப் பணி உள்பட பல்வேறு பணிகளுக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழ்க இளைஞர்கள், அரசின் மதுபான கடைகளில் மது அருந்திவிட்டு, மட்டையாகி விடுகின்றனர். இதனால், பல்வேறு வேலைகளுக்கு தேவையான வேலை யாட்களை வடமாநிலங்களில் இருந்து நிறுவன உரிமையாளர்கள் அழைத்து வருகின்றனர். அதன்படி தினசரி ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள், தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், ஈராடு, திருப்பூர் உள்பட பல மாவட்டங்களில், வடமாநிலத்தவர்கள் இல்லையென்றால், அங்குள்ள நிறுவனங்கள் செயல்படாத நிலை உருவாகி உள்ளது.
ஆனால், இதை நாம் தமிழர் கட்சி உள்பட சில கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. வடமாநிலத்தவர்களை விரட்டிக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், வேலூரில் தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாவட்ட பொதுக்குழு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. இ,தில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்ரமராஜா, “ஈரோட்டில் மே 5ம் தேதி வணிகர் முழக்க மாநாடு நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்படும் பணம், பெரு முதலாளிகளுக்கு தான் பயனளிக்கிறது. வணிகர்களுக்கு ஜிஎஸ்டி வருவாயில் 2% இழப்பீடாக கொடுக்க வேண்டும். மத்திய அரசின் பட்ஜெட், எங்களுக்கு ஏமாற்று பட்ஜெட்டாகவே உள்ளது.
தமிழ் மக்கள் வேலைசெய்ய தயார் என்றால் நாங்களும் வேலை வாய்ப்பை கொடுக்க தயார். பழைய கடைகளை இடித்து புதியதாக கட்டப்படும் கடைகளில் பணிபுரிய, பழைய ஆட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமைச்சர் நேருவை வலியுறுத்துகிறோம்.
எங்களை பொறுத்தவரை வடமாநிலம், மேற்கு மாநிலம், கிழக்கு மாநிலம், தென்மாநிலம் என பிரித்து பார்க்க முடியாது. எங்களுக்கு ஆட்கள் முக்கியம். தமிழக இளைஞர்கள், கஞ்சா, போதை போன்ற பழக்கத்திற்கு ஆளாகாமல், உழைக்க முன் வர வேண்டும். நாங்கள் எல்லாம் உழைத்து தான் முன்னுக்கு வந்துள்ளோம் என்றார்.
மேலும், தமிழக நிதிநிலை அறிக்கையில் நாங்கள் எதிர்பார்ப்பது, உள்ளாட்சி, நகராட்சி கடை வாடகையை சீர்படுத்திட வேண்டும். லைசன்ஸ் முறையை சிங்கிள் விண்டோவாக அமைத்து தர வேண்டும். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்குமுன் முதலமைச்சர் எங்களை அழைத்து பேசுவார். அப்போது எங்களின் கோரிக்கைகளை முழுமையாக தெரிவிப்போம்.
இவ்வாறு கூறினார்.