நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளுங்கட்சி திமுகவுக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும்….
கொங்கு மண்டலத்தின் வலிமையான தலைவராக உருவெடுத்துவரும் செந்தில்பாலாஜிக்கு, இந்த இடத்தில் திமுகவை வரலாறு காணாத அளவிற்கு வெற்றி பெறச்செய்து அதன் மூலம் எஞ்சிருயிக்கும் சீனியர்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறலாம் என்பது கணக்கு. கொங்கு மண்டல அசைன்மென்ட் தமிழக முழுவதும் கிடைக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருக்கலாம்.
அதைவிட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் எதிர்பார்ப்பு. எதிர்க்கட்சி என்றாலும், அப்போதுதான் எடப்பாடியை தட்டி வைக்க முடியும். இரட்டை இலை கிடைத்து விட்டாலும், எடப்பாடிக்கு இது வாழ்வா சாவா தேர்தலே .. வெற்றி பெறுவதெல்லாம் இரண்டாம் பட்சம்.
திமுக கூட்டணிக்கு எதிராக கௌரவமான அளவில் வாக்குகளை பெற்றே ஆக வேண்டும். அப்போதுதான் வலிமையான தலைவன் என்பதை நிலைநிறுத்த முடியும் என்கிற நிலைமை அவருக்கு.. தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்காமல் அதிமுகவை வலிய நிறுத்தியதும் இதற்காகத்தான்..
வாக்கு பெறுவதில் பரிதாபமான நிலையை அதிமுக அடைந்தால் எடப்பாடியின் எதிர்காலத்திற்கு பெரிய சறுக்கல் ஆரம்பிக்கலாம். ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் சசிகலா ஆகிய மூன்று தரப்பும் எடப்பாடி ஒரு கௌரவமான நிலையை எட்டி விடக்கூடாது என்பதில் கண்டிப்பாக குறியாக இருப்பார்கள்.
இவர்களுக்கு திமுக எதிரி. பழனிச்சாமி துரோகி. ஆகையால் இவர்களின் ஆதரவாளர்கள் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள் என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லாத விஷயம்.
பாஜகவை எடுத்துக் கொண்டால், அதுவும் எடப்பாடியை மட்டும் தட்டி வைக்கவே இந்த தேர்தலை பயன்படுத்தும்.. அதிமுக வலிமை பெற்று தன்னை டைரக்ட் செய்யும் இடத்தில் இனி இருக்கக்கூடாது என்பது அதன் விருப்பமாக இருக்கும்.
இவ்வளவு அமளி துமளியில், எது நடந்தாலும் நமக்கு என்ன வாங்கி விடப் போகிறது என்று சந்தோசமாகவும் நிம்மதியாக இருப்பது தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி இருக்கும் காங்கிரஸ் கட்சி மட்டும்தான்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அள்ளி வீசப்படும் பணம், தங்கள் தொகுதிக்கும் ஒரு இடைத்தேர்தல் வராதா என எல்லா தொகுதி வாக்காளர்களையும் ஏங்க வைக்கும்..