டெல்லி: அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்தியஅரசு வழங்கும் குழுவினரை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம், இந்திய தொழிலதிபர் அதானி நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி அறிக்கை வெளியிட்டருது. இதன் காரணமாக, அதானி நிறுவனம் கடுமையான சரிவை சந்தித்தது. அதுபோல உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அதானி தற்போது 24வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் 2 பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பான காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூடு, இதுதொடர்பாக அரசு நிபுணர் குழுவை பரிந்துரைத்தால் அந்த குழு அரசு நியமித்தத்தாகவே கருதப்பட நேரிடும். பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமெனில் உச்சநீதிமன்றமே நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என தெரிவித்ததுடன், நிபுணர்களின் பெயர்களை மத்திய அரசு சீல் வைத்த கவரில் வழங்கினால் , அதை நாங்கள் ஏற்கமாட்டோம் என கூறினார்.
மேலும், அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் குழு அமைப்பது தொடர்பாக உத்தரவை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.