பாலாறு: வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் மீனவர் பலியான நிலையில், அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, தமிழகம்-கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் அடிபாலாறு பகுதியில் கடந்த 14-ந்தேதி மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் ராஜா பலியானார். அவரது உடல் காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதனால் தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
தமிழக கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு காவிரியும் பாலாறும் கலக்கும் இடத்தில் தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள் பாலாற்றில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பாலாற்றங்கரையில் இருந்த பரிசல்களையும் வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் சிலர் தப்பி கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால் இந்த சம்பவத்தையடுத்து கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா மட்டும் காணாமல் போயிருந்தார்.
இதனால் கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்றங்கரையில் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. இதற்கிடையே இன்று காணாமல் போன மீனவர் ராஜா கர்நாடக எல்லையை ஒட்டிய அடிப்பாலாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேதப்பரிசோதனைக்கு பிறகே ராஜா எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இரு மாநில எல்லைகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்து வருவதால் இரு மாநில போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீனவர் உயிரிழப்பு தொடர்பாக கர்நாடக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், பிப்ரவரி 14ந்தேதி மாதேஸ்வரன் மலைக்காட்டில் மான் வேட்டையாட 4 பேர் துப்பாக்கிகளுடன் வன்தனர். வனத்துறையினர் அங்குசென்றபோது, வேட்டை வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 பேர் காயமடைந்தனர். ஒருவர் இறந்ததாக சந்தேகம் உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைநத்வர்கள் தப்பிச்சென்று விட்டனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக மாதேஸ்வரன் மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.