ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை என அம்மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திமுகவினர் வாக்காளர்களை சிறை வைத்துள்ளதாகவும், பணம் கொடுத்து வருவதாகவும் அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் குற்றம் சுமத்தி உள்ளனர். அதுபோல, தேர்தல்ஆணையம் அனுமதியின்றி, தனியார் திருமண மண்டபத்தை உபயோகப்படுத்தி வந்ததாக, அதிமுக, திமுகவினர் உபயோகப்படுத்திய மண்டபங்களுக்கு தேர்தல் ஆணைய அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று செய்தியளார்களை சந்தித்த, மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார், தேர்தல் தொடர்பான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்றவர், அரசியல் கட்சியினர் கூறுவதுபோல, ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் யாரும் சிறை வைக்கப்படவில்லை. இதுகுறித்து வாக்காளர்களிடம் விசாரணை நடத்தினோம் என்றார்.
மேலும், இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. நேற்று கூட தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் குறித்து தான் வீடியோ கான்பிரஸ் மீட்டிங் நடந்தது, விதிமுறைகள் மீறியது குறித்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்றவர், இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.48.6 லட்சம் வரை பணம் பிடிபட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.