சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க இன்று கடைசி நாளாக உள்ள நிலையில், மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
இதில் விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதை ஒழுங்குப்படுத்த மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த நடவடிக்கை கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி தொடங்கியது. அன்றுமுதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இணைக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், பின்னர் ஜனவரி மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இறுதியாக பிப்ரவரி 15ந்தேதி என அறிவிக்கப்பட்டது.
இருந்தாலும், இன்னும் பலர் ஆதார் எண்ணை இணைக்காத நிலையில், மேலும், 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது ஆதார் எண் இணைப்பற்கான அவகாசத்தை முடித்தால், அதன் பாதிப்பு தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தெரிகிறது.