சென்னை: இலங்கை ராணுவத்துடனான போரில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது பிரபாகரனை வைத்து தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன.
வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரம், தமிழக மக்களால் மறக்கப்பட்ட நிலையில், சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கொளுத்தி போட்டுள்ளார். இதனால், தமிழ்நாட்டிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு ஒரு தகவல்களை தெரிவித்து மக்களை குழப்பி வருகிகின்றனர்.
விடுதலைப்புலிகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும், மதிமுக, நாம் தமிழர் கட்சிகள், நெடுமாறனுக்கு எதிரான தகவல்களை தெரிவித்து வருகின்றன. அதே வேளையில் இலங்கையில் எல்டிடிஇ மீதான தாக்குதலை நடத்திய அப்போதைய இலங்கை ராணுவ அதிகாரி பொன்சேகாவும் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும், அவரது டிஎன்ஏ சோதனை உள்பட அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியளார்களிடம் பேசிய சீமான், இலங்கையில் “போர் முடிந்து, ஒரு பேரழிவை சந்தித்துவிட்ட பிறகு, 15 ஆண்டுகள் ஓரிடத்தில் பதுங்கியிருந்து, பத்திரமாக இருந்துகொண்டு எதுவுமே பேசாமல் இருப்பாரா பிரபாகரன் என நெடுமாறனுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் என் தம்பி சின்னவன் பாலச்சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பத்திரமாக தப்பிச் சென்றிருப்பார் என்று நினைக்கிறீர்களா? என செய்தியாளர்களிடம் எதிர்கேள்வி எழுப்பியவர், எந்தச் சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று கூறி வீரமாக நின்று சண்டை செய்தவர் எங்கள் அண்ணன். தன்னுயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிச் செல்கின்ற கோழை அல்ல, எனவே, தேவையற்று குழப்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. சரி அவரே சொல்கிறார்… மக்களுக்கு முன் ஒருநாள் தோன்றுவார் என்று. அப்படி தோன்றுபோது பேசுவோம். ஐயா பழ.நெடுமாறன் கூறுவதுபோல் ஒருநாள் எங்கள் தலைவர் நேரில் வந்துவிட்டால், வந்ததில் இருந்து பேசுவோம்” என்று கூறி பிரபாகரன் விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில், பழ நெடுமாறனுக்கு பதில் கூறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் அண்ணன் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது’ என்றவர், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது என தெரிவித்து உள்ளார்.
மொத்தத்தில் மக்களை குழப்புவதில் தமிழக அரசியல் கட்சிகளைப்போல வேறு எந்தவொரு மாநிலத்திலும் கட்சிகளும் இல்லை என்பதை நமது அரசியல் கட்சி தலைவர்கள் நிரூபித்து வருகின்றனர்.
பிரபாகரன் உயிரோடு வந்தால் மகிழ்ச்சி, நான் சந்திப்பேன்! கேஎஸ்.அழகிரி…