’ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாளை காலை எஸ்.எஸ்.எல்.வி டி-2 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது.

SSLV-D2  ராக்கெட் நாளை காலை 9.18 மணி அளவில் , சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து   விண்ணில் பறக்கும் மற்றும் அதன் 15 நிமிட பயணத்தின் போது மூன்று செயற்கைக்கோள்களை 450 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் வைக்க முயற்சிக்கும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் , சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செயற்கைகோள்களை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தமுடியாமல் போனது.

இதனையடுத்து இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி.-2 ரக ராக்கெட்டை வடிவமைத்தது. இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. 1 ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக மாற்று செயற்கைகோள்கள் செலுத்தப்பட உள்ளன.

எஸ்.எஸ்.எல்.வி. -2 ரக ராக்கெட்டை நாளை காலை 9.18 மணிக்கு விண்ணில் இஸ்‌ரோ செலுத்துகிறது. பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் ஆசாதி சாட்-2, ஜானஸ்-1 செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்வதாக தெரிவித்துள்ளது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியுள்ளது.