டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் நிலையில், மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் சரமாரி குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். அதானி பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் கொடுத்தார்? என கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில், அதைத்தொடர்ந்து அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளுமே மிக மோசமாக சரிந்து வருகின்றன. கடந்த 3ம் தேதி மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 35% வரை சரிந்துவிட்டது. ஹிண்டென்பர்க் அறிக்கை வெளியான பிறகு மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு சுமார் 70% மேல் சரிந்துவிட்டது. இதுமட்டுமல்லாமல், அதானி பத்திரங்களின் மதிப்பும் சரிந்துவிட்டது. இதனால், அதானி பத்திரங்களை இனி பிணையாக ஏற்க முடியாது என சிட்டிகுரூப், கிரெடிட் சூயிஸ் போன்ற சர்வதேச வங்கிகள் தடாலடியாக முடிவெடுத்துவிட்டன. இதுபோக, அதானி பங்குகளை தேசிய பங்குச் சந்தையும், மும்பை பங்குச் சந்தையும் கூடுதல் கண்காணிப்பு பட்டியலில் (ASM) வைத்துள்ளன.
இந்தநிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், அதானி குழுமம் செய்த முறைகேடுகள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு அவைகளிலும் இன்று விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது உறவுகள் தொடங்குகின்றன.. ஒருவர் பிரதமர் மோடியுடன் தோளோடு தோள் நின்று, பிரதமருக்கு விசுவாசமாக இருந்தார் மற்றும் மீள் எழுச்சி குஜராத் என்ற யோசனையை உருவாக்க மோடிக்கு உதவினார். 2014-ல் பிரதமர் மோடி டெல்லி சென்றபோதுதான் உண்மையான மந்திரம் தொடங்கியது.
காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தின் ஆப்பிள்களில் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நாம் நடந்து செல்லும் சாலைகள் வரை அதானி மட்டுமே பேசப்படுகிறது. அதானி இப்போது 8-10 துறைகளில் இருக்கிறார் என்றும், 2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலரை எட்டியது எப்படி என்றும் இளைஞர்கள் எங்களிடம் கேட்டனர்.
தமிழ்நாடு, கேரளா, இமாச்சலப் பிரதேசம் என எல்லா இடங்களிலும் ‘அதானி’ என்று ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் ‘அதானி’, ‘அதானி’, ‘அதானி’ தான்… அதானி எந்த தொழிலிலும் இறங்குவார், தோல்வியடைய மாட்டார், அது எப்படி என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
முன்பு அதானியின் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி, தற்போது மோடியின் விமானத்தில் அதானி பயணிக்கிறார். இந்த விஷயம் முன்பு குஜராத்தில் இருந்தது, பின்னர் இந்தியாவாக மாறியது, இப்போது சர்வதேசமாகிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் அதானி பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் கொடுத்தார்? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி ‘‘நாடாளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தைத் தவிர்க்க மோடிஜி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அது உங்களுக்குத் தெரியும். அதானி விவகாரத்தில் விவாதம் நடத்தி உண்மை வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நடந்துள்ள லட்சம் கோடி ஊழல் வெளிவர வேண்டும். அதானியின் சக்தி என்ன என்பதை நாடு அறிய வேண்டும்.
2022ஆம் ஆண்டில், இலங்கை மின்சார வாரியத் தலைவர் இலங்கையில் அதானிக்கு காற்றாலை மின்சாரத் திட்டத்தை வழங்குமாறு பிரதமர் மோடியால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக உள்ள நாடாளுமன்றக் குழுவிற்குத் தெரிவித்தார், இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அல்ல, அதானியின் வணிகத்திற்கான கொள்கை:
பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றதன் மாயாஜாலம் மூலம் அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடனை வழங்குகிறது. பின்னர் அவர் வங்காளதேசம் செல்கிறார், பின்னர் பங்களாதேஷ் மின் மேம்பாட்டு வாரியம் அதானியுடன் 25 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
அதானி ஒருபோதும் ட்ரோன்களை உருவாக்கவில்லை, ஆனால் HAL, இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்கள் அதைச் செய்கின்றன. அதையும் மீறி பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்று பேசிய பிறகு, அதற்கான ஒப்பந்தம் அதானிக்கு கிடைத்துள்ளது.
மத்தியஅரசின் கொள்கைகளால் நாடு முழுவதும் மக்கள் பெரும் துயரத்தை அடைந்து வருகின்றனர். தனது கருத்துக்களை மக்களிடம் தெரிவிக்கும் வாய்ப்பு ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. ஒற்றுமை நடைபயணத்தின் போது மக்களின் பிரச்சனைகளை ஆழமாக புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. பயணத்தின்போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை குறித்தும் மக்கள் என்னிடம் தெரிவித்தனர். குடியரசு தலைவர் உரையில் வேலைவாய்ப்பின்மை குறித்து எந்த தகவலும் இல்லை.
சில வருடங்களாக நான் அரசைப் பற்றியும், ‘ஹம் தோ, ஹுமாரே தோ’ என்றும் பேசிக் கொண்டிருக்கிறேன். அதானிஜி பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை, பயப்படுகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும், அதைத் தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது’’ என அவர் தெரிவித்தார்.
ஒப்பந்த அடிப்படையில் படைகளில் சேர்க்கப்படும் அக்னிவீர் திட்டத்தை இளைஞர்கள் விரும்பவில்லை. இத்திட்டம் இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும். ஒட்டுமொத்த நாடும் அதானி விவகாரத்தை பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த அத்வானி குழும நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2022 ஆம் ஆண்டு 140 பில்லியன் டாலராக அதிகரித்தது எப்படி? அதானி குழுமத்தின் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள உதவுகின்றனர்.
அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு? அனைத்துவகை தொழில்களிலும் அதானி குழுமம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதானி இத்தனை தொழில்களை உருவாக்க யார் உதவினார்கள் ? அதானியின் சொத்து மதிப்பு ஒரு சில வருடங்களிலேயே மளமளவென உயர்ந்தது எப்படி? அனைத்து தொழில்களிலும் அதானி மட்டுமே வெற்றி பெறுகிறார் அது எப்படி? அதற்கு என்ன காரணம் ? அதானி குழுமத்திடம் விமான நிலையங்களை மோடி அரசு கட்டாயப்படுத்தி கொடுக்கிறது. முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய வளர்ச்சியில் ஈடுபடக்கூடாது. அதானிக்காகவே விதிமுறைகளில் திருத்தம் செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இவ்வாறு கடுமையாக விமர்சித்தார்.