டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தற்கு பிரதமர் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பது தொடர்பாக குழு அமைப்பு தலைமை நீதிபதி சந்திரசூடு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைத்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முயற்சியில் தொடர்பாக முதல்கட்டமாக, இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒடியா ஆகிய நான்கு மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட உள்ளது.
இந்த மொழிபெயர்ப்பாளர் குழுவுக்கு ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைவராக இருப்பார். அவருடன் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ்,. தேசிய தகவல் மையத்திலிருந்து சர்மிஸ்தா; ஐஐடி டெல்லியில் இருந்து மிதேஷ் கப்ரா; ஏக் படி அறக்கட்டளையில் இருந்து விவேக் ராகவன்; அகமியில் இருந்து சுப்ரியா சங்கரன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்த முயற்சியின் முதல் கட்டமாக, இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒடியா ஆகிய நான்கு மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும்.
இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்டுள்ள டிவிட்டில், “சுப்ரீம் கோர்ட்டின் ஆற்றல்மிக்க நீதிபதியான நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளேன். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் குறைந்தபட்சம் ஹிந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒரியா ஆகிய நான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதை உறுதி செய்வதே முதல் படியாக உள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை பல்வேறு இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்ய இயந்திர கற்றல் மூலம் ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது . ஆனால் இயந்திர கற்றலுக்கு இன்னும் சரிபார்ப்பு தேவைப்படுகிறது, அதற்காக ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தால் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரிகளின் திறமையை நாங்கள் இப்போது தட்டிக் கேட்கிறோம், அவர்கள் வீட்டில் உட்கார்ந்து செய்யக்கூடிய பணிக்காக உச்ச நீதிமன்றத்தால் ஊதியம் பெறுவார்கள் மற்றும் மொழிபெயர்ப்பு சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம்,” என்று தலைமை நீதிபதி கூறினார். மேலும், சுவாரஸ்யமாக, அத்தகைய சரிபார்ப்பு ஏன் அவசியம் என்பதையும் தலைமை நீதிபதி விவரித்தார்.
“உதாரணமாக, SLP யிலிருந்து சிவில் மேல்முறையீடு செய்யும் ஒவ்வொரு தீர்ப்பையும் ‘லீவ் கிராண்டட்’ என்று சொல்வதன் மூலம் தொடங்குகிறோம். நீங்கள் அதை நேரடியாக ஹிந்தியில் மொழிபெயர்த்தால் அது ‘அவ்காஷ் பிராப்ட் ஹோ கயா’ (விடுமுறை வழங்கப்பட்டது) என்று சொல்லும். தீர்ப்பின் முதல் வரியில் ‘அவ்காஷ் பிராப்ட் ஹோ கயா’ என்று ஒரு குடிமகன் கூறுவதை விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி கூறினார்.
முன்னதாக ஜனவரி 21 அன்று, CJI, அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகில் இந்திய நீதித்துறையின் அடுத்த கட்டம், செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் உதவியுடன் அனைத்து இந்திய மொழிகளிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைக்கச் செய்வதாகும் என்று குறிப்பிட்டார். இந்த யோசனையை செயல்படுத்தினால் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும், தலைமை நீதிபதியின் கருத்துக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்தே, முதல் கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.