புதுடெல்லி:
குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
நாட்டின் 74-ஆவது குடியரசு தினம், நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தேசியத் தலைநகர் தில்லியில் கடமைப் பாதையில் நடைபெறும் கண்கவர் விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து, நாட்டின் ராணுவ வல்லமையையும், கலாசார பெருமையையும் பறைசாற்றும் பிரம்மாண்ட அணிவகுப்பை அவர் பார்வையிடவுள்ளார்.
இதற்கு முன்பாக, நாட்டு மக்களுக்கு இன்று மாலையில் திரௌபதி முர்மு உரையாற்றவிருக்கிறார். அவரது உரை, அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படும். அத்துடன், அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் ஒளிபரப்பாகும். ஹிந்தியிலும், பின்னர் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளிலும் ஒலிபரப்பு செய்யப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.