திருவாரூர்: மக்களவைத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும் – எனது நிழலைக்கூட யாரும் நெருங்க முடியாது என்று சசிகலா ஆவேசமாக கூறினார். அவரது இன்றைய பேட்டி, அதிமுக காலடியில் கிடக்கும் பாஜகவை சீண்டும் வகையிலேயே அமைந்துள்ளதுடன், திமுகவையும் கடுமையாக சாடியுள்ளார்.
அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுவின் இரு தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளதால், கட்சியின் சின்னமும் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிமுக தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வரவிருக்கும் தீர்ப்பு என்ன சொல்லப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதுபோல சசிகலா மீதான பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதனால், வழக்கை வைத்து, அதிமுகவினரை மிரட்டுவதுபோல, சசிகலாவையும் மத்தியஅரசு மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைத்து, தனது நிழலைக்கூட யாரும் நெருங்க முடியாது என சசிகலா எச்சரிக்கும் வகையில் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என கங்கனம் கட்டிக்கொண்டு அலையும் சசிகலா, தற்போதைய இபிஎஸ், ஓபிஎஸ்க்கு டஃப் கொடுக்கும் விதமாக தனது ஆதரவாளர்களை மாநிலம் முழுவதும் திரட்டி வருகிறார். இந்த நிலையில், அதிமுக விவகாரம் குறித்து பேசியவர், இந்த விவகாரத்தில் யாரையும் கு றை சொல்ல முடியாது. நாம் என்ன கைக்குழந்தையா? என கேள்வி எழுப்பியவர், பாஜகவை மனதில் வைத்துக்கொண்டு, நம்மை அவர்கள் கட்டுப்படுத்த யார் கேள்வி எழுப்பியவர், என்னை யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என் நிழலைக் கூட நெருங்க முடியாது என்றார்.
இந்த நிலையில், இன்று திருவாருர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தற்போதைய அதிமுக, ஆளும் திமுக உள்பட தனது மீதான வழக்குகள் குறித்தும் ஆவேசமாக பதில் கூறினார்.
ஒருவர் பதவிக்கு வருவதற்கு காரணம் அந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டன்தான். அவர்கள் எப்போதும் நம்மை ஏற்றிவிடும் ஏணியின் கடைசிப்படியாக தான் எப்போதும் இருப்பார்கள். அவர்களால் தான் நாம் மேடையில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என எம்ஜிஆர் பல இடங்களில் சொல்லி வந்துள்ளார். அது மாதிரியான சூழ்நிலை இன்று அதிமுகவில் இல்லை. இதற்கு ஒரு நல்ல முடிவினை கீழ் படிந்து நிற்கும் தொண்டர்கள் நிச்சயமாக எடுப்பார்கள்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதை அவரவர் நடவடிக்கையை சார்ந்ததுதான். சின்னத்தை முடக்கும் செயலில் யார் ஈடுப்பட்டாலும் அது எம்ஜிஆர், ஜெயலலிதா, அதிமுக தொண்டர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாக இருக்கும்
. ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்காக சிறுகட்சிகளின் அலுவலகங்களுக்கு அதிமுக தலைவர்கள் போய் ஆதரவு கேட்பது ஒன்னறை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியான அதிமுகவை பற்றி அவர்கள் அவ்வளவுதான் புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.
“ஒரு கட்சியில் இரண்டு, மூன்று பேர் சேர்ந்து முடிவு எடுக்க முடியாது. அப்படி முடிவு எடுக்கும் கட்சி திமுகவாக இருக்கலாம். ஆனால், அதிமுக மிகப் பெரியது என்றார். பாஜக அலுவலகம் செல்லும் நிலையில் அதிமுக இல்லை. இதைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள், புரிந்துகொள்ள வேண்டும்.
அதிமுக தொண்டர்களின் முடிவுதான் என்னுடைய முடிவு. தொண்டர்களின் குமுறலைப் பார்த்துக் கொண்டுள்ளேன். யாரையும் குறை சொல்ல முடியாது. நாம் என்ன கைக்குழந்தையா? நம்மை அவர்கள் கட்டுப்படுத்த. யாரலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.
உடைந்த அதிமுக நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்திப்பதற்கான முயற்சிகளை எடுத்து கொண்டுதான் உள்ளேன்.
இரட்டை இல்லை சின்னத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது. இரட்டை இலை சின்னத்தை முடக்க எந்தக்காலத்திலும் விடமாட்டேன். என் உயிர் உள்ளவரை சின்னத்தை முடக்க முடியாது சில பேரை எடை போட்டுக் கொண்டுள்ளேன். பொதுச் செயலாளர் பதவியை அளிக்கக் கூடிய இடத்தில் தொண்டர்கள்தான் உள்ளனர். கட்சியில் பிரிந்து உள்ள தலைவர்கள் யார் எப்படி என எடை போட்டு வருகிறேன். நீதிமன்றம், தேர்தல் ஆணையம் முடிவை எதிர்பார்த்துள்ளேன்.
கட்சியின் கொள்கைகள், கூட்டணி உடன்பாடு ஆகியவற்றை அதிமுகவில் இருவர் கலந்து பேசி முடிவு எடுக்கமுடியாது. அதிமுகவில் உள்ள தற்போதைய குழப்பத்திற்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். அதிமுகவை ஒன்றிணைக்க அனைத்து வகையிலும் முயற்சி எடுத்து வருகிறேன். இனிவரும் காலங்களில் அவற்றை வெளிப்படையாக செய்யவேன்.
இபிஎஸ், ஓபிஎஸ் இருவரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அது திமுகவிற்கு சாதகமாகவே உள்ளது. இனியாவது இவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதை தவிர்த்துவிட்டு ஒன்றிணைந்து தமிழக அரசியில் தீயசக்தியான திமுக வீழ்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அதுமட்டும் அல்ல தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பும் அதுதான்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி அணி வேட்பாளர்களை நிறுத்தினால் இதில் யாரை ஆதரிக்க வேண்டும் என கட்சி தொண்டர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு என் ஆதரவு என்ற முடிவில் உள்ளேன். என் தனிப்பட்ட முடிவு என்பது ஏதும் இல்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு இருக்கும் என கூறமுடியாது. அது மக்களின் கையில்தான் உள்ளது. தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய முடியுமோ அதைதான் வாக்குறுதியாக அளித்தார்.
திமுகவினர் மேடை தோறும் பெரிய பெட்டியை வைத்து கோரிக்கை மனு வாங்கினர். அதனை மக்கள் முன்பே பூட்டுபோட்டு பூட்டினர். தேர்தல் வெற்றிக்கு பின் பெட்டி திறக்கப்பட்டு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வெற்று வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகிவிட்டது, எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை பெட்டியில் போட்டப்பட்ட பூட்டின் சாவி தொலைந்துவிட்டதா? என தெரியவில்லை என்றவர், திமுகவை வீழ்த்த அனைவரும் கைகோக்க வேண்டும்.
இவ்வாறு சசிகலா கூறினார்.