மதுரை: தென்மாவட்ட கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்க உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் நாப்கின் இயந்திரம் அமைக்க மனுவில் கேட்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
மதுரை கே.கே. நகரை சேர்ந்த பொழிலன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், ”தமிழகத்தில் தற்போது கல்லூரிகள் அதிகமாகி உள்ளன. கடந்த ஆண்டுகளை காட்டிலும் கூடுதல் சதவீதமாக பெண்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். சிறிய நகரங்கள் முதல் பெரு நகரங்கள் வரை கல்லூரிகள் உள்ளன. கல்லூரிக்கு செல்லும் மாணவிகளின் சதவீதம் அதிகரித்துள்ளது . இதையடுத்து தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆண்கள் மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவிதமும் அதிகரித்துள்ளது.
கல்லூரி மாணவிகள், மாதவிடாய் காலத்தில் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், அனைத்து கல்லூரிகள், பல்கலை கழங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும். மேலும் பயன்படுத்திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கான. வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்” என மனுவில் கூறி உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை, நியாயமானது ஏன் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு மனுவில் கேட்கவில்லை . தென் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் கேட்டு உள்ளீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுதாரர் இந்த மனுவில் யுஜிசி தலைவரையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.