டெல்லி: திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ந்தேதி இடை தேர்தல் நடைபெறும் என அகில இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் தெரிவித்து உள்ளார்.

3 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவித்தார். அதன்படி, பிப்ரவரி 27ந்தேதி வாக்கு பதிவும், மார்ச் 2ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல்: ஜனவரி 31ம் தொடக்கம்

வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்: பிப்ரவரி 7ந்தேதி,

வேட்பு மனுக்கள் பரிசீலனை:‘ பிப்ரவரி 8ம் தேதி

வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: பிப்ரவரி 10ம் தேதி 

வாக்குப்பதிவு:  பிப்ரவரி 27ந் தேதி

வாக்கு எண்ணிக்கை:  மார்ச் 2ந்தேதி 

என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே 2021ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில், மூத்த தலைவர் ஈவேகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா வெற்றி பெற்ற நிலையில், தற்போது, அந்த தொகுதியில் யார் போட்டியிடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

அதுபோல, பாஜக அதிமுக, தமாகா கூட்டணி சார்பில், தமாகா வேட்பாளராக யுவராஜ் களமிறங்கி தோல்வியை சந்தித்த நிலையில், இடைத்தேர்தலில் யார் போட்டியிடப் போகி றார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதிமுக பாஜக இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையில், பாஜக தனித்துபோட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,26,876 ஆகும்.  இவர்களில் 1,10,713 பேர் ஆண்கள். 1,16,140 பேர் பெண்கள், மூன்றால் பாலினத்தவர் 23 பேர். இந்த தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மறைந்த திருமகன் ஈவேரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளரான தமாகா வேட்பாளர் யுவராஜ், 58,396 வாக்குகள் பெற்றிருந்தார்.