டெல்லி: 2023ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர்  ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த கூட்டத்தொடர் தொடர்  ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி  தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரு அவைகளின்  கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து,  பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடையும்.

மத்திய பட்ஜெட் கூட்டதொடர்   முதற்கட்ட அமர்வு ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரையிலும்,  இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜனவரி 31ந்தேதி தொடங்கும், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு அவைகளும் விரிவான விவாதத்தை நடத்துகின்றன, அதைத் தொடர்ந்து யூனியன் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சரும் பதில் அளிக்கவுள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியின் போது, அரசின் சட்டமன்ற நிகழ்ச்சி நிரல் தவிர பல்வேறு அமைச்சகங்களுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரின் போது யூனியன் பட்ஜெட், பண மசோதா நிறைவேற்றப்படுகிறது. சென்ட்ரல் விஸ்டா மேம்பாட்டின் ஒரு பகுதியாக புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியை புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நடத்தலாம் என, பார்லிமென்ட் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மத்தியஅரசால் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறாமல் உள்ள 9 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில், தற்போதுள்ள  பிரதமர் மோடியின் ஆட்சியின், கடைசி விரிவான பட்ஜெட் கூட்டத்தொடர்  என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்ததாக சிறு பட்ஜெட் மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பதவி ஏற்றபிறகு அவர் பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில், ஆற்றும் முதல் உரை என்பது குறிப்பிடத்தக்கது.