சென்னை: ஜனாதிபதி திரவுபதி  முர்முவை திமுக எம்.பி.க்கள் சந்தித்து, தமிழக சட்டமன்றத்தில், கவர்னர் உரையன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த மனுவை அளித்தனர். பின்னர் செய்தியளார்களை சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு,  தமிழ்நாட்டில்,   சனாதனக் கொள்கைகள் திணிப்பதே ஆளுநரின் நோக்கம் என்றும், தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தது மோசமான, இழிவான செயல். இதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது நடைபெற்ற விரும்ப தகாத சம்பவங்கள், தமிழக சட்டமன்ற வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஆளுநரை திரும்ப பெற வேண்டும்  தமிழகஅரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த புகார் கடிதத்தை ஒப்படைத்தனர்.

அப்போது, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விவகாரம்  மோசமானது என்றும்,   ஆளுநர் மரபை மீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியதுடன்,  ஆளுநருக்கு அறிவுரை வழங்குமாறு குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை விடுத்தனர். முதல்வர் எழுதிய கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் வழங்கினர்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர்  டி.ஆர்.பாலு தலைமையிலான திமுகவின் எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, வில்சன், ஆ.ராசா  மற்றும் அமைச்சர் ரகுபதி கொண்ட 5 பேர் கொண்ட குழுவினர் திரெளபதி முர்முவை இன்று சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரையின்போது நடந்த நிகழ்வு தொடர்பாக திமுக குழு விளக்கம் அளித்தது. மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த புகார் கடிதத்தையும் குடியரசுத் தலைவர் முர்முவிடம் அந்தக் குழுவினர் ஒப்படைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, ’’தமிழகம் பெரியார் மண். இங்கு ஆர்எஸ்எஸ், சனாதனக் கொள்கைகள் செல்லுபடி ஆகாது. அதைத் திணிப்பதே ஆளுநரின் நோக்கம்’ என்று கூறியதுடன்,  தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தது மோசமான, இழிவான செயல் என்றும் அதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.