சென்னை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீஸும் கொடுக்காமல் 25 ஊழியர்களை திடீர் என பணி நீக்கம் செய்து எடுக்கப்பட்ட உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறி திமுக அரசு ஏராளமானோரை பணி நீக்கம் செய்தது. அதன்படி, தஞ்சை, திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் கடந்த 2020-2021ம் ஆண்டில் நேரடி பணி நியமனங்கள் மூலம் முறைகேடாக பணியமர்த்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், மதுரை 47பேர், திருச்சி 40பேர், தேனி 38பேர், திருப்பூர் 26பேர், விருதுநகர் 26பேர, நாமக்கல் 16பேர், தஞ்சாவூர் 8பேர் என ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் இருந்தும் மொத்தம் 236பேரின் பணி நியமனங்கள் முறைகேடாக நடைபெற்றதாக திமுக அரசு அமைந்ததும், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி தாக்கல் செய்து அறிக்கை அளித்து. அதன்பேரில் மொத்தம் 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இநத் நிலையில், தமிழக அரசின் பணி நீக்கம் உத்தரவை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட கே.பவ்னீத் சூர்யா, எம்.ராஜசேகர், டி.ஏழுமலை உள்ளிட்ட 25 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவில் “அனைத்து தேர்வு நடைமுறைகளும் முடிந்து, பின்னர் பணியில் நியமிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக பணியில் நீடித்து வரும் நிலையில், எந்தவொரு நோட்டீஸும் அளிக்காமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளோம்.
பணி நீக்கம் செய்ய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில், ஒன்றியத்தின் பொது மேலாளர் மூலம் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என தங்களது மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு மனுதாரர்களுக்கு பணிநீக்கம் தொடர்பாக எந்தவித நோட்டீஸும் கொடுக்காமல் பணி நீக்கம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று கூறியதுடன், தமிழகஅரசின் உத்தரவுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் ஆவின் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 17ஆம் தேதி ஒத்தி வைத்தார்.