உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மார்டினா நவ்ரத்திலோவா தனக்கு தொண்டை புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார்.

18 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியனும், சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் உறுப்பினருமான மார்டினா நவ்ரத்திலோவாவுக்கு புற்றுநோய் இருப்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கான சிகிச்சையை இந்த மாதத்தில் அவர் தொடங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

66 வயதான நவ்ரத்திலோவா 1974ம் ஆண்டு முதல் 2006 ம் ஆண்டு வரை ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் உலகின் நெம்பர் 1 ஆட்டக்காரராக வலம்வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பரில் டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் நடந்த WTA இறுதிப் போட்டியில் கலந்துகொண்டபோது கழுத்தில் நிணநீர் முனை பெரிதாகி இருப்பதைக் கவனித்ததாகவும், பயாப்ஸியில் தொண்டைப் புற்றுநோயின் ஆரம்ப நிலை இருப்பதாகவும் அவர் கூறினார். தொண்டையில் பரிசோதனை செய்துகொண்டிருந்தபோது, தொடர்பில்லாத மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டதாக நவ்ரத்திலோவா கூறினார்.

“இந்த இரண்டும் மிக தீவிரமான தாக்குதல் என்ற போதும் சரிசெய்யக்கூடியது தான், சாதகமான முடிவை நான் எதிர்பார்க்கிறேன்” என்று மார்டினா நவ்ரத்திலோவா தெரிவித்துள்ளார்.

பெண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் 31 மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 உட்பட ஒட்டுமொத்தமாக 59 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கடைசியாக 2006 யு.எஸ். ஓபனில் பாப் பிரையனுடன் கலப்பு இரட்டையர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.

167 ஒற்றையர் பட்டங்கள் பெற்ற இவர் தொடர்ந்து 331 வாரங்கள் WTA தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார்.

1994 ம் ஆண்டு ஓய்வு பெறப்போவதாக அறிவித்த நவ்ரத்திலோவா பின்னர் 2000 ஆம் ஆண்டில் இரட்டையர் ஆட்டங்களில் பங்கேற்றார்.

நவ்ரத்திலோவா 2000 ஆம் ஆண்டில் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த மாத இறுதியில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளார்.