ஏகவுரி அம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் அமைந்துள்ளது.
பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான். அம்பிகை, அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு, இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி,”ஏ கவுரி. சாந்தம் கொள்” (கவுரி என்பது அம்பிகையின் ஒரு பெயர்) என்றார். கணவன் சொல் கேட்ட அம்பிகை சாந்தமானாள். இவளுக்கு கரிகாலற்சோழ மன்னன் இங்கு கோயில் எழுப்பினான். சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு “ஏகவுரியம்மன்” என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வல்லன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் தலத்திற்கு வல்லம் என்றும், அம்பிகைக்கு “வல்லத்துக்காளி” என்றும் பெயர்கள் ஏற்பட்டது.
அம்பிகை அக்னி கிரீடம் அணிந்து, இரண்டு தலைகளுடன் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். ஒரு தலை கோரைப்பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இது, அசுரனை அழித்த கோப வடிவமாகும். இது, பக்தர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழிக்கும் சக்தியாகும். இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. இது, நல்லதை அருளும் சாந்தமான நிலை ஆகும். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது. பாதத்தின் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக அம்பாள் கோயில்களில், சன்னதியில் பூசித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோயிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். குழந்தைச் செல்வம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்த பிரசாதம் கொடுக்கப்படும். அம்பிகையை வேண்டி இங்கேயே எலுமிச்சை சாற்றை குடித்து விட வேண்டும். இதனால், விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அம்பிகைக்கு இருபுறமும் ராகு, கேது நாக வடிவங்கள் உள்ளன. இவையிரண்டும் அம்பிகையின் கட்டுப்பாட்டின் கீழிருப்பதாக ஐதீகம். களத்திர தோடம், காலசர்ப்ப தோடத்தில் திருமணத்தடை ஏற்பட்ட பெண்களுக்கான பிரதான வழிபாட்டுத் தலம் இது. பெண்கள் அம்பிகைக்கு குளியல் மஞ்சள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். பின், அதையே பிரசாதமாகத் தருகின்றனர். தினமும் அந்த மஞ்சள் தேய்த்து பெண்கள் நீராடி வர, விரைவில் நல்ல வரன் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த மஞ்சளின் வடிவிலேயே அம்பிகை, பக்தர்களின் வீட்டிற்கு எழுந்தருளுவாள் என்பது ஐதீகம்.
தஞ்சாவூரை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களின், குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் வழிபடப்பட்ட அம்பிகை இவள். சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்பு இவளை வணங்கி, உத்தரவு கேட்டபின்பே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கரிகாற்சோழ மாகாளி, கைத்தலப்பூசல்நங்கை, வல்லத்துப்பட்டாரிகை, காளாப்பிடாரி, ஏகவீரி என்று இவளுக்குப் பெயர்களுண்டு. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்பிகைகக்கு ஹோமத்துடன் விசேட பூசை நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று அம்பிகைக்கு சண்டிஹோமம் நடக்கும். ஆடி கடைசி வெள்ளியன்று நடக்கும் விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கியும், பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அம்பிகைக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பிரகாரத்தில் வராகி, பிரத்யங்கிரா, சுப்பிரமணியர், காவல் தெய்வங்கள் சாலியங்காத்தான், லாடசன்னாசி, வெள்ளையம்மாள், பொம்மியுடன் மதுரை வீரன், கருப்பசாமி, ஏகாம்பரம், பட்டவராயர் மற்றும் சிவலிங்கம், சப்தகன்னியர் உள்ளனர்.
நோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற, பெண்கள் இங்கு வேண்டி எருமைக்கன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். எருமை எமதர்மனுக்குரிய வாகனம் என்பதன் அடிப்படையில் இந்த வழிபாட்டைச் செய்கின்றனர்.