சென்னை: சீனாவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் படித்து வந்து தமிழக மாணவர், அங்க கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவது உடலை தமிழகம் கொண்டுவர தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷேக் என்ற மாணவர் சீனாவின் ஹெயிலாஜியாங் மாகாணத்தில் உள்ள கிகஹர் மருத்துவக் கல்லூரியில் ஐந்து ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் சமீபத்தில் சொந்த ஊருக்க வந்துவிட்டு கடந்த டிசம்பர் 11ல் மீண்டும் சீனாவுக்கு திரும்பி உள்ளார். சீனாவில் கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதால், அவரை 8 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு கொரோனா தொற்று பரவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்த, அவரத பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவனின் பெயரில் 5 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் செய்யபட்டு இருக்கும் நிலையில் மருத்துவ செலவு என்ற பெயரில் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறபட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருந்துள்ளார். பின்னர், 20 லட்சம் ரூபாய் சிகிச்சைக்காக கேட்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக மாணவனின் உடல்நிலை குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் மனம் உடைந்த பெற்றோர் மாணவனின் உடல்நிலை குறித்து அறிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர் தனி பிரிவு, இந்திய வெளியுறவுத் துறை என அனைத்து இடங்களுக்கும் மனு அளித்தும் மாணவனின் உடல்நிலையை அறிந்துகொள்ள இயலாமல் இருந்தது. இந்த நிலையில் அப்துல் சேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையில், மருத்துவ மாணவர் ஷேக் கடைசியாக பேசிய வீடியோ ஒன்று குடும்பத்தார் தரப்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பிரச்னையை தமிழ்நாடு முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று இந்த மருத்துவ மாணவரை மீட்க உதவிடுமாறு மாணவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.
சீனாவில், கொரோனா பாதித்தவர்களில், வைரஸ் தொற்று சரியான பின் எடுத்த கல்லீரல் பரிசோதனையில், 50 சதவீதம் பேருக்கு, மித மான அளவில் கல்லீரல் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், கொரோனா வைரஸ், நேரடியாக கல்லீரலை பாதித்து இருக்கலாம் அல்லது கொரோனாவை அழிப்பதற்கு, கல்லீரல் சில வேதிப்பொருட்கள் சுரந்து, அதனால் கல்லீரல் செல்களில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்; காரணம் உறுதியாக தெரியவில்லை. ஏற்கனவே, ஹெபடைடிஸ் – பி வைரஸ் பாதிப்பு, கல்லீரல் செல்கள் அழியும் சிரோசிஸ் நிலை, கல்லீரலில் கொழுப்பு சேருவதால் வரும், கொழுப்பு கல்லீரல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதை மறுப்பதற்கில்லை என சுகாதார நிறுவனங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.